Saturday 5 August 2017

மனிதக் குரங்கிலிருந்து மனிதன் உருவானதில் உழைப்பு வகித்த பாத்திரம்

மனிதக் குரங்கிலிருந்து மனிதன் உருவானதில் உழைப்பு வகித்த பாத்திரம்
(ஃபிரெட்ரிக் எங்கெல்ஸ்)
எழுதியது : மே - ஜூன் 1876
முதல் பதிப்பு : முன்னேற்ற பதிப்பகம், ஐக்கிய சோவியத் சோசியலிச குடியரசு, மாஸ்கோ, 1934

தமிழாக்கம் : தோழர் ஹசிப்

பதிப்பாளர் உரை
"அடிமைத்தனத்தின் மூன்று அடிப்படை வடிவங்கள்" என்ற விரிவான புத்தகத்தை எழுத ஏங்கெல்ஸ் முடிவு செய்திருந்தார். அந்த புத்தகத்தின் முன்னுரையாக இந்த கட்டுரை எழுதப்பட்டது. அந்த புத்தகத்தை எழுதமுடியாமல் போனதால், அதன் முன்னுரையாக எழுதப்பட்ட இந்த கட்டுரையை "மனிதக்குரங்கிலிருந்து மனிதன் உருவானதில் உழைப்பின் பங்கு" என்ற பெயரில் ஏங்கெல்ஸ் வெளியிட்டார். குரங்குடன் ஒத்துப்போகும் வகையில் இருந்த நம்முடைய மூதாதையரிடமிருந்து, நீண்டநெடிய காலத்தில் நடைபெற்ற பல்வேறு நிகழ்வுகளின் விளைவாக, குரங்கின் பண்பிலிருந்து முற்றிலும் மாறுபட்ட புதிய வகை உயிரான, மனிதன் உருவானதை ஏங்கெல்ஸ் இதில் விளக்கியுள்ளார். மனிதனுடைய உடல் அமைப்பும், மனித சமுதாயமும் உருவானதில் உழைப்பும், உழைப்பதற்கான கருவிகளும் எவ்வாறு முக்கிய பங்காற்றின என்பதை இதில் விளக்கியுள்ளார். இந்த கட்டுரை 1876 ஆம் ஆண்டு, ஜூன் மாதம் எழுதப்பட்டதாக தெரிகிறது. 1896 ஆம் ஆண்டு இந்த கட்டுரை "புதிய காலம்" (Die Neue Zeit) என்ற பத்திரிகையில் வெளியிடப்பட்டது.

I
உலகில் உள்ள அனைத்து பொருட்களும் உழைப்பால் உருவாக்கப்பட்டவை என அரசியல் பொருளாதார வல்லுனர்கள் கூறுகின்றனர். இயற்கை அளிக்கக்கூடிய மூலப்பொருட்களை உழைப்பு பொருட்களாக மாற்றுகிறது. உழைப்பை இந்த வகையில் சுருக்கியும் கூறமுடியாது. மனித வாழ்க்கைக்கு உழைப்பே அடிப்படையாக விளங்குகிறது. இன்னும் சரியாக சொல்ல வேண்டுமென்றால் உழைப்பே மனிதனை உருவாக்கியுள்ளது.
66 ஆயிரம் மில்லியன் ஆண்டுகளிலிருந்து 2.58 மில்லியன் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலம், புவியியலாளர்களால் "மூன்றாம் காலம்" (Tertiary Period) என்று அழைக்கப்படுகிறது. இந்த கால காட்டத்தின் இறுதி பகுதியில், தற்போது இந்திய பெருங்கடலில் மூழ்கிப்போனதாக கருதப்படும், மிகப்பெரிய கண்டத்தின் வெப்ப மண்டல காடுகளில், மிகவும் வளர்ச்சியடைந்த மனிதக் குரங்கு இனம் வாழ்ந்தது. நம்முடைய மூதாதையர்களான இந்த குரங்குகள் பற்றி டார்வின் தோராயமாக விளக்கியுள்ளார். அவர்களின் உடல் முழுவதும் ரோமத்தால் மூடப்பட்டிருந்தது. அவர்களுக்கு தாடியும், கூறிய முனை கொண்ட காதுகளும் இருந்தன. மரங்களின் மீது அவர்கள் கூட்டமாக வாழ்ந்தனர்.
முதலில், அவர்களின் வாழ்க்கை முறையின் அடிப்படையில் பார்க்கும்போது, மரம் ஏறும்போது, அவர்களின் கைகளின் தேவை, கால்களின் தேவையிலிருந்து முற்றிலும் வேறுபட்டிருந்தது. இதன் பிறகு, அவர்கள் நடக்கத்தொடங்கியபோது கைகளை பயன்படுத்துவதை நிறுத்தத் தொடங்கினர். அத்துடன், நிமிர்ந்த உடல் அமைப்பையும் பெறத்தொடங்கினர். இதுவே, மனித குரங்கிலிருந்த மனிதன் உருவான மாற்றத்தின் முக்கியமான முதல் படியாகும்.
தற்போது உள்ள அனைத்து மனிதக்குரங்குகளும், அவசர காலத்தில் நிமிர்ந்தபடி பாதங்களால் நடக்கின்றன. ஆனால், அது முழுமையான நடை என்று கூறமுடியாது. ஆனால், அவைகள் இயல்பாக நடக்கும்போது, முதுகு வளைந்தபடி கைகளையும் பயன்படுத்துகின்றன. பெரும்பான்மையான மனிதக் குரங்குகள், தங்கள் மணிக்கட்டை தரையில் ஊன்றி, கால்களை மேலே இழுத்துக்கொண்டு, தங்கள் உடலை கைகளுக்கு இடையில் முன்னும் பின்னும் அசையச்செய்து நடக்கின்றன. இதைபார்க்கும் போது, கால்களை இழந்த மாற்றுத்திறனாளி, இரண்டு ஊன்றிகோளை வைத்து நடப்பதைபோல் தோன்றும். பொதுவாக, நான்கு கால்களில் நடந்ததிலிருந்து இரண்டு கால்களில் நடந்தது வரையிலான இடைக்காலத்தில் இருந்த ஒவ்வொரு கட்டத்தையும் தற்போது உள்ள மனித குரங்குகளில் பார்க்க முடியும். இருந்தபோதும், இரண்ட கால்களில் நடப்பதென்பது மனித குரங்குகளில் தற்காலிகமாக நிகழக்கூடிய ஒன்றாக உள்ளது.
நமது முன்னோர்களான மனித குரங்குகளுக்கு, நிமிர்ந்து இரண்டு கால்களால் நடப்பது என்பது முதலில் விதியாகவும், காலப்போக்கில் அது அவசியமாகவும் மாறிப்போனது. வேறு பல வேலைகளை செய்யும் அளவிற்கு கைகள் வளர்ச்சி பெற்றன. ஏற்கனவே, மனிதக்குரங்குகளுக்குகிடையே, கை மற்றும் பாதங்களை பயன்படுத்துவதில் வித்தியாசம் உள்ளது. ஏற்கனவே கூறியதுபோல, மரம் ஏறும்போது கைகளும், பாதமும் வெவ்வெறு வகையில் பயன்படுகின்றன. பழமையான பாலூட்டி (Lower Mammals) உயிரினங்கள் முன்னங்கால்களில் உள்ள பாதத்தை பயன்படுத்துவதுபோலவே, மனிதக்குரங்குகள் தங்கள் கைகளை உணவை சேகரிப்பதற்கும் அதை பிடிப்பதற்கும் பயன்படுத்துகின்றன. பல மனித குரங்குகள், மரங்களில் கூடு கட்டுவதற்கும், கால நிலைகளிலிருந்து தங்களை பாதுகாக்க கிளைகளுக்கிடையில் கூரை அமைத்துக்கொள்ளவும் தங்கள் கைகளை பயன்படுத்துகின்றன. சிம்பான்சி குரங்கு இதற்கு சிறந்த உதாரணம். குச்சிகளை கொண்டு எதிரிகளிடமிருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ளவும், கல் மற்றும் பழங்களால் எதிரிகளை தாக்கவும் மனிதக்குரங்குகள் கைகளை பயன்படுத்துகின்றன. அவை கூண்டில் பிடிபடும்போது, மனிதர்களை போன்றே கைகளால் பல சிறிய வேலைகளை செய்கின்றன. இந்த இடத்தில்தான், மனிதனைப்போல தோற்றமுடைய ஆனால், வளர்ச்சியடையாத மனித குரங்கின் கைகளுக்கும், பல லட்சம் ஆண்டுகால உழைப்பினால் உருவான மனித கைகளுக்கும் உள்ள மிகப்பெரிய வித்தியாசத்தை காணமுடியும். இந்த இரண்டு கைகளிலும், எலும்பு மற்றும் தசைகளின் எண்ணிக்கையும் அவை அமைந்துள்ள விதமும் ஒன்றாகவே உள்ளன. ஆனால், பழமையான காட்டு மிராண்டி மனிதனின் கைகளால் செய்ய முடிந்த வேலையைக் கூட மனிதக் குரங்கின் கைகளால் செய்ய முடியாது. மனிதக் குரங்கால், ஒரு கல்லால் ஆன, கரடுமுரடான ஒரு கத்தியைக் கூட செய்ய முடியாது.
மனிதக்குரங்கிலிருந்து மனிதன் தோன்றுவதற்கு பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் ஆகின. நம்முடைய முன்னோர்களான மனிதக்குரங்குகள் தொடக்கத்தில் மிக சாதாரண வேலைகளுக்கு மட்டுமே கைகளை பயன்படுத்தின. ஏறக்குறைய விலங்ககுளைபோல் இருந்த காட்டு மிராண்டி மனிதர்கள், மனிதக்குரங்கிலிருந்து மனிதனாக மாறிய இடைநிலையிலிருந்த மனிதக் குரங்குகளை விட மிகவும் மேம்பட்டவர்கள். முதல் கருங்கள், மனித கைகளினால் கத்தியாக மாற்றப்படுவதற்கு எடுத்துக்கொள்ளப்பட்ட காலத்தை அதற்கு முந்தைய வரலாற்றுக்காலத்தை ஒப்பிட்டுப் பார்க்கும்போது அந்த காலம் அற்பமாக தோன்றுகிறது. ஆனால், தீர்மானகரமான அடி எடுத்துவைக்கப்பட்டு விட்டது. கை தற்போது விடுதலை பெற்றுவிட்டது. இனி அது பல திறமைகளை வெளிகாட்டவுள்ளது. இவ்வாறாக கையின் செயல்திறன் அடுத்தடுத்த தலைமுறைகளில் வளர்ச்சியடைந்தது.
கை என்பது உழைப்பதற்கான உறுப்பு மட்டுமல்ல, உழைப்பினால் உருவான உறுப்பு. உழைப்பினாலும், புதிய செயல்பாடுகளுக்கு பழகிக்கொண்டதாலும், தசை, தசைநார்களின் வளர்ச்சியினாலும், கை எலும்புகள் புதிய வளர்ச்சியை அடைந்தன. இந்த வளர்ச்சியின் தொடர்ச்சியாக, புதிது புதிதாக உருவான வேலைகளினாலும், மிக சிக்கலான பணிகளை செய்ததாலும் மனிதனின் கைகள் மிகச் சிறப்பான வளர்ச்சியடைந்தன. புகழ்பெற்ற ஓவியரான ரஃபேல் சிறந்த ஓவியத்தை தீட்டுவதற்கும், புகழ்பெற்ற சிற்பியான தோர்வாட்சன் மிகச் சிறந்த சிற்பத்தை உருவாக்கவும், இசைக்கலைஞர் பகானினி சிறந்த இசையை உருவாக்கவும் ஏற்ற வகையில் கைகள் வளர்ச்சி பெற்றன.
ஆனால் கை என்பது தனியான ஒரு உறுப்பு அல்ல. பல உறுப்புகளை கொண்ட சிக்கலான நமது உடல் வடிவமைப்பில், கை ஒரு பாகம் மட்டுமே. ஆகவே, கை பெற்ற நன்மையை அது சார்ந்த உடலும் பெற்றது. இது இரண்டு வழிகளில் நடந்தது.
முதலாவதாக, டார்வினின் "தொடர்பு வளர்ச்சி விதி"-யின்படி, (Law of Correlation of growth) கையின் வளர்ச்சியின் காரணமாக உடலும் பயன் பெற்றது. உடலில் உள்ள ஒரு குறிப்பிட்ட பாகம், அதற்கு தொடர்பில்லாத மற்றொரு பாகத்துடன் பிணைந்துள்ளது என தொடர்பு வளர்ச்சி விதி கூறுகின்றது. இதற்கு உதாரணமாக, உட்கரு அற்ற ரத்த சிவப்பணுக்களை கொண்ட, முதுகெலும்பின் முதல் எலும்பு இரட்டை மூட்டுக்களால் இணைக்கப்பட்ட தலையுடனும் உள்ள எல்லா உயிரினங்களும், தங்ளது குட்டிகளுக்கு பாலூட்டுவதற்கான பால் சுரப்பிகளை பெற்றுள்ளன. இதேபோல், பாலூட்டிகளில், பிளவுபட்ட குளம்புகளை கொண்ட அனைத்து விலங்குகளும், முழுவதுமாக மெல்லப்படாத தீவனத்தை எடுத்து, மீண்டும் அசைபோடுவதற்கு ஏற்ற வகையிலான இரட்டை வயிற்றை பெற்றிருக்கின்றன. உடலின் ஒரு உறுப்பின் வடிவங்களில் ஏற்படும் மாற்றம் மற்றொரு உறுப்பில் மாற்றத்தை ஏற்படுத்துகின்றது. இந்த தொடர்பை நம்மால் விளக்க முடியாவிட்டாலும் இதுவே உண்மை. நீல நிற கண்களையுடைய வெள்ளை நிறப் பூனைகளில், ஏறக்குறைய அனைத்தும் செவிடாகவே உள்ளன. ஆகவே, இந்த தொடர்பியல் வளர்ச்சி விதியின் படி பார்க்கும்போது, படிப்படியாக வளர்ச்சியடைந்த கைகளும், நிமிர்ந்து நடப்பதற்கு ஏற்ற வகையில் மாற்றமடைந்த கால்களும் உடலின் மற்ற உறுப்புகளில் மாற்றத்தை ஏற்படுத்தின. இருந்தபோதும், இது போதுமான அளவு ஆராயப்படவில்லை. ஆகவே இருப்பதை கூறமுடிகிறதே தவிர, கூடுதலாக இதை விளக்க முடியவில்லை.
கைகளின் வளர்ச்சி உடலின் மற்ற பாகத்தில் வெளிப்படையாக ஏற்படுத்திய மாற்றங்கள் மிக முக்கியமாக கவனிக்க வேண்டிய ஒன்று. நாம் ஏற்கனவே அறிந்த படி, நம்முடைய முன்னோர்களான குரங்குகள் ஒரு சமூகமாக கூடி வாழ்ந்தன. ஆகவே, கூடி வாழும் குணமுடைய மனிதனுடைய தோற்றத்தை, தனித்து வாழும் குணம் கொண்ட சமீபத்திய மூதாதையரிடம் தேடுவது தவறு. உழைப்பினால் ஏற்பட்ட கையின் வளர்ச்சியினால், மனிதன் இயற்கையின் மீது தன்னுடைய ஆளுமை செலுத்தினான். இந்த வளர்ச்சியின் ஒவ்வொரு கட்டத்திலும், மனிதனின் அறிவு விரிவடைந்தது. இதுவரை அறியப்படாத இயற்கையின் புதிய பண்புகளை மனிதன் அறியத்தொடங்கினான். மற்றொரு புறம், உழைப்பின் வளர்ச்சி, மனிதர்கள் தங்களுக்குள் பரஸ்பரம் உதவிக்கொள்வது மற்றும் கூட்டாக உழைப்பதன் பயனை ஒவ்வொரு மனிதனுக்கும் உணரவைத்தது. இதன் காரணமாக, மனித சமூகத்தின் உறுப்பினர்களிடையே நெருக்கம் ஏற்பட்டது. சுருக்கமாக சொன்னால், வளர்ந்து வந்த மனிதர்கள் தங்களுக்குள் பேசிக்கொள்ள வேண்டியம் நிலையை எட்டினர். இந்த தேவை பேசுவதற்கான உறுப்பினை உருவாக்கியது. அதுவரை எழுப்பப்பட்டு வந்த ஒலிகளை விட மேம்பட்ட ஒலிகளை வெளியிட ஏதுவாக, மனிதனின் குரல்வளை வளர்ச்சியடைந்தது. ஒரு ஒலிக்குப் பிறகு மற்றொன்றை உச்சரிக்க, வாய் பழகிக்கொண்டது.
மற்ற வலங்குகளிடமிருந்து மனிதனை ஒப்பிட்டுப்பார்க்கும் போது, உழைப்பு மற்றும் அதன் வளர்ச்சியின் காரணமாகவே மொழி உருவானதை நிரூபிக்க முடியும். நன்கு வளர்ச்சியடைந்த விலங்குகளுக்கிடையே, நடைபெறும் சிறிய அளவிலான தகவல் பறிமாற்றத்திற்குக் கூட, பேச்சு தேவைப்படுவதில்லை. தங்களால் பேச முடியவில்லை என்பதையும், மனிதனின் பேச்சை புரிந்துகொள்ள முடியவில்லை என்பதையும் எந்த விலங்கும் ஒரு குறையாக எண்ணுவதில்லை. ஆனால், மனிதனால் விலங்குகள் பழக்கப்படுத்தப்படும்போது இது முற்றிலும் மாறுபடுகிறது. நாய் மற்றும் குதிரை, மனிதனுடைய பழக்கத்தின் காரணமாக, எந்த மொழியையும் அவைகளின் எல்லைக்குட்பட்டு புரிந்துகொள்ளும் வகையில் தங்களின் காதுகளை வளர்த்துக்கொண்டுள்ளன. அதுவரை மனிதனிடம் அன்பு மற்றும் நன்றியுணர்வு போன்ற உணர்வுகளை செலுத்துவதற்கான திறனையும் அவை பெற்றுள்ளன. இப்படிப்பட்ட வலங்குகளுடன் அதிகமாக பழக வாய்ப்புள்ளவர்கள், அந்த விலங்குகள் தங்களால் பேச முடியவில்லையே என்பதை ஒரு குறையாக உணர்வதை கவனிக்கலாம். ஆனால், இந்த குறைபாட்டை யாராலும் சரி செய்ய முடியாது. ஏனென்றால் அந்த விலங்குகளின் பேசும் உறுப்புகள் ஒரு குறிப்பிட்ட வகையில் வளர்ச்சி பெற்றுவிட்டன. ஆனால், ஒரு குறிப்பிட்ட எல்லைக்குட்பட்ட, பேசும் உறுப்பை பெற்றிருக்கும் விலங்குகள் இந்த குறைபாட்டை உணர்வதில்லை. பறவைகளின் வாய் அமைப்பு, மனிதனுடைய வாயின் அமைப்பிலிருந்து வேறுபட்டது. ஆனால், விலங்குகளில் பறவைகளால் மட்டுமே பேசக் கற்றுக்கொள்ள முடியும். இனிமையற்ற குரலை பெற்றிருக்கும் கிளியால் மட்டுமே சிறப்பாக பேச முடியும். மனிதனுடன் பேசுவது மற்றும் நட்புகொள்வதால் கிடைக்கும் இன்பத்திற்காக, தான் என்ன பேசுகிறோம் என்பது புரியாமலும் கூட, கிளி, மணிக்கணிக்கில் சொன்னதையே திரும்பிச் சொல்லும். ஆனால், ஒரு எல்லைக்குட்பட்டு, தான் பேசுவதன் அர்த்தத்தை புரிந்துகொள்ள கிளிகள் கற்றுக்கொள்கின்றன. அர்த்தத்தை புரிந்துகொள்ளும் வகையில் ஒரு கிளிக்கு கெட்ட வார்த்தையை கற்றுக்கொடுங்கள். பிறகு அந்த கிளியை தொந்தரவு செய்யுங்கள். பெர்லின் நகரின் தெருக்களில் தள்ளு வண்டியில் பழம் விற்பவர்கள் பயன்படுத்துவதுபோல, அந்த கிளி மிக பொருத்தமாக கெட்ட வார்த்தையை பயன்படுத்துவதை பார்க்க முடியும். திண்டபண்டங்களை கேட்டு கிளி கெஞ்சும்போதும் இது பொருந்தும்.
முதலில் உழைப்பு பின் அதைத்தொடர்ந்து பேச்சு இவை இரண்டின் தூண்டுதலின் விளைவாக மனிதக்குரங்கின் மூளை, படிப்படியாக மனித மூளையாக வளர்ச்சி பெற்றது. இந்த மூளை மனிதக்குரங்கின் மூளையை போல் இருந்தாலும், அதை விட பெரியதாகவும், மிகவும் நேர்தியாகவும் இருந்தது. மூளையின் வளர்ச்சியோடு சேர்ந்து அதனுடன் நேரடி தொடர்புடைய உணர்ச்சிக்கான புலன்கள் வளர்ச்சிபெற்றன. பேச்சின் வளர்ச்சி எவ்வாறு அதனுடன் தொடர்புடைய கேட்கும் திறனை வளர்த்ததோ அதேபோல், மூளையின் வளர்ச்சி அனைத்து வகையான உணர்ச்சிக்கான புலன்களையும் செழுமையடையச் செய்தது. வெகு தூரத்தில் உள்ள பொருளை மனிதனை விட கழுகு எளிதாக பார்க்க முடியும். ஆனால், மனிதனின் கண்கள் கழுகின் கண்களைவிட பொருட்களை அதிகமாக பகுத்துணர முடியும். நாய்களுக்கு மனிதனை விட மோப்ப சக்தி அதிகம். ஆனால், வெவ்வேறு பொருட்களை குறிக்கின்ற வாசனைகளை அதனால் வேறுபடுத்தி உணர முடியாது. தொடக்க நிலையில் இருந்த மனிதக்குரங்கு தொடு உணர்வை பெறாமல் இருந்தது, ஆனால் உழைப்பின் விளைவால் வளர்ச்சியடைந்த கைகளோடு சேர்ந்து தொடு உணர்வும் வளர்ச்சியடைந்தது.
மூளை மற்றும் அதன் தொடர்புடைய உணர்ச்சிக்கான புலன்களின் வளர்ச்சி, மேலும் தெளிவு பெற்ற பகுத்தறிவு, சாராம்சத்தை புரிந்து கொள்ளும் மற்றும் முடிவு காணும் திறன் ஆகியவற்றின் வளர்ச்சியும் உழைப்பு மற்றும் பேச்சின் மீது ஏற்படுத்திய எதிர்வினை, அவை இரண்டும் மேலும் வளர்ச்சியடைவதற்கான தூண்டுதலாக அமைந்தது. மனிதக்குரங்கிலிருந்து வேறுபட்டு மனிதனாக மாறியவுடன் இந்த வளர்ச்சி முற்றுப் பெறவில்லை. ஆனால், கூடுதலான வலிமைமிக்க முன்னேற்றத்தை பெற்றது. இந்த வளர்ச்சி வெவ்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு மக்களிடையே அளவில் மாறுபட்டது. இங்கும் அங்குமாக சில இடங்களில் பகுதிவாரியான அல்லது தற்காலிக பின்னடைவினால் தடங்களை சந்தித்தது. இந்த தொடர் முன்னேற்றத்தால், முழுமையாக வளர்ச்சியடைந்த மனிதன் தோன்றினான். இதன் விளைவாக "சமூகம்" என்ற என்ற புதிய பொருள் உருவானது. இது மனிதனை ஒரு புறம் வலிமையான வளர்ச்சிக்கு உந்தித்தள்ளியது. மறுபுறம், தீர்க்கமான திசைகளில் வழிநடத்தவும் செய்தது.
மரங்களில் வாழ்ந்த குரங்குகளிலிருந்து மனித சமூகம் உருவாவதற்கு முன்னர் கடந்துபோன, பூமியின் லட்சக்கணக்கான ஆண்டு வரலாறு, மனித வாழ்வின் ஒரு நொடியை ஒப்பிடும்போது, எந்த பெரிய முக்கியத்துவத்தையையும் பெறவில்லை. (ஏங்கெல்சின் குறிப்பு: இந்த துறையில் தலை சிறந்த வல்லுனரான சர் வில்லியம் தாம்சன், தாவரங்களும் விலங்குகளும் வாழ்வதற்கு ஏற்ற வகையில் பூமி குளிர்ச்சியடைவதற்கு, ஏறக்குறைய நூறு மில்லியன் ஆண்டுகள் ஆனதாக கணக்கிட்டுள்ளார்.) மனித சமூகத்திற்கும் குரங்கு கூட்டத்திற்கும் இடையிலான இயல்பு ரீதியான வேறுபாடாக நாம் மறுபடியும் எதை கண்கிறோம்? அது, உழைப்பு. பூலோக நிலைமைகளாலும் அல்லது மற்ற குரங்கு கூட்டங்களின் எதிர்ப்பினாலும், தனக்கென வரையறுக்கப்பட்ட உணவுக்கான இடங்களில், உணவை தேடிக்கொள்வதுடன் குரங்கு கூட்டம் திருப்தியடைந்தது. புதிய உணவுக்கான இடங்களை வெற்றிகொள்ள, இடப்பெயர்வையும், பேராட்டங்களையும் மேற்கொண்டது. தானே அறியாமல் தன்னுடைய கழிவுகளினால், அந்த நிலத்திற்கு உரத்தை இட்டதைத் தவிர, இயற்கையிலிருந்து எதையும் வலிந்து எடுத்துக்கொள்வதற்கு திறனற்று இருந்தது. உணவை வழங்க தகுதியான அனைத்து நிலங்களும்  இந்த கூட்டங்களினால் ஆக்கிரமிக்கப்பட்ட பின்பு, குரங்குகளின் எண்ணிக்கையில் பெருக்கம் ஏற்படவில்லை. அதிகபட்சமாக அவை எவ்வளவு அதிகரிக்க முடியுமோ அவ்வளவு அதிகரித்த பின் அந்த எண்ணிக்கையில் வளர்ச்சி ஏற்படவில்லை.
எல்லா விலங்குகளும் பெருமளவு உணவை விரயம் செய்கின்றன. அத்துடன், உணவின் அடுத்த தலைமுறையை முளையிலேயே அழித்து விடுகின்றன. வேட்டைக்காரனைபோல, தனக்கு அடுத்த ஆண்டு குட்டிகளை உணவாக அளிக்கும் பெண் மான்களை, ஓநாய்கள் விட்டுவைப்பதில்லை. கிரீஸ் நாட்டின் செம்மறி ஆடுகள், முழு வளர்ச்சி பெறுவதற்கு முன்னரே இளம் புதர்களை தின்று மலைகளை பசுமையின்றி வெறிச்சோட செய்தன. விலங்குகளின் இந்த "சூறையாடும் பொருளாதாரம்" அவைகளை வழக்கமான உணவுகளை தாண்டி, வேறு உணவுகள் உண்பதற்கு நிர்பந்தபடுத்தியதன் மூலம் அவை படிப்படியாக மாற்றமடைவதில் முக்கியபங்காற்றியது. இதன் காரணமாக அந்த விலங்குகளின் ரத்தம் வேறுவகையான ரசாயன உள்ளடக்கத்தை பெறுகிறது. அதன் முழு உடல்கட்டமைப்பும் படிப்படியாக மாறுகிறது. இந்த மாற்றங்களை ஏற்றுக்கொள்ளாத விலங்கினங்கள் மடிந்துபோகின்றன. இந்த சூறையாடும் பொருளாதாரம், நம்முடைய முன்னோர்களை மனிதக் குரங்கிலிருந்து மனிதனாக மாற்றியதில் மிக முக்கி பங்காற்றியது என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. மனிதக்குரங்ககினத்தில், அறிவுத்திறமையிலும், புதியவைகளை ஏற்றுக்கொள்வதிலும், மற்றவற்றை விட திறமைவாய்ந்த குரங்குகளை, இந்த சூறையாடும் பொருளாதாரம், புதிய வகை தாவரங்களை உண்பதற்கும், அந்த தாவரங்களில் உண்ணத்தகுந்த அனைத்து பாகங்களையும் உண்பதற்கும் இட்டுச்சென்றது. சுருங்கச்சொன்னால், உணவுவகைகளின் எண்ணிக்கை பெருகியது. அதற்கேற்ப உடலுக்குள் செல்லும் சத்துப்பொருட்களின் வகைகளும் அதிகரித்தது. இந்த சத்துப்பொருட்களே மனிதனாக மாறுவதற்கான ரசாயன அடித்தளத்தை அமைத்தது.
ஆனால், இவை அனைத்தும் சேர்ந்தும் கூட, "உழைப்பு" என்ற சொல்லிற்கு பொருத்தமான பொருளை பெற்றுவிடவில்லை. உழைப்பு கருவிகளை செய்யத் துவங்கியதிலிருந்தே உழைப்பு தொடங்குகிறது. தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள, வரலாற்றுக்கு முந்தைய மனிதன் வழி வழியாக பயன்படுத்திய பொருட்கள், வரலாற்று காலத்தின் தொடக்கத்தில் வாழ்ந்த மனிதனின் வாழ்முறை மற்றும் காட்டுமிராண்டி மனிதனின் முதிர்ச்சியற்ற வாழ்க்கை முறையையும் வைத்து பார்க்கும்போது எந்தவகையான பழங்கால உழைப்புகருவிகளை நாம் கண்டுபிடித்துள்ளோம்? அவை வேட்டையாடுவற்கும், மீன்பிடிப்பதற்கம் பயன்படுத்தப்பட்ட கருவிகள். இதில் வேட்டையாட பயன்படுத்தப்பட்ட கருவிகள் ஆயுதமாகவும் பயன்படுகிறது. வேட்டையாடுதலும், மீன்பிடித்தலும் அதுவரை தாவரங்களை மட்டும் உண்டு வந்தநிலையை மாற்றி, இறைச்சியையும் உண்ணக்கூடிய நிலைக்கு அடித்தளமிட்டது. மனிதக்குரங்கிலிருந்து மனிதன் உருவான மாற்றத்தில் இது மற்றொரு முக்கியமான படிநிலையாகும். உயிரினங்களின் வளர்ச்சிதை மாற்றத்திற்கு அவசியமான உட்பொருட்கள், ஏறக்குறைய தயார் நிலையில் இறைச்சி உணவில் உள்ளன. இதனால், ஜீரணமாவதற்கான நேரம் குறைந்தது. இதனை தொடர்ந்து தாவர வாழ்வை ஒத்த, உடலின் தாவர உணவு சார்ந்த மாற்றங்களும் குறைந்தது. மிருக வாழ்வு செயல்திறனுடன் வெளிப்படுவதற்கு கூடுதல் நேரம், பொருள் மற்றும் விருப்பம் மேலும் கிடைக்கப்பெற்றது. இவ்வாறு உருவாகி வந்த மனிதன், தாரவ இனத்திலிருந்து விலகி விலங்குகளை விட மேல் நிலைக்கு உயர்ந்தான். தாவர உணவையும், இறைச்சி உணவையும் ஒன்றாக உட்கொண்டது எவ்வாறு காட்டுப் பூனையையும், காட்டு நாயையும் மனிதனுக்கு நண்பனாக மாற்றியதோ அதேபோல் உருவாகி வந்த மனிதனுக்கு உடல் வலுவையும் சுதந்திரத்தையும் வழங்குவதில் முக்கிய பங்காற்றியது. இருந்தபோதும், இறைச்சி உணவு மூளைக்கே அதிக பலனை தந்தது. மூளை அதன் ஊட்டத்திற்கும் வளர்ச்சிக்கும் தேவையான பொருட்களை செழுமையாக பெற்றது.  இதன் காரணமாக மூளை தலைமுறைக்கு தலைமுறை, விரைவாகவும், நேர்த்தியாகவும், வளர்ச்சியடைய முடிந்தது. சைவ உணவு உண்பவர்களுக்கு இதன் மூலம் பணிவாக கூற விரும்புவது என்னவென்றால், இறைச்சி உணவு இல்லாமல் மனிதன் உருவாகியிருக்க முடியாது. இறைச்சி உணவு நாம் அறிந்த அனைத்து மக்களிடமும் மனித மாமிசம் சாப்பிடும் பழக்கத்தை உருவாக்கியதென்றாலும், (ஜெர்மனியர்களின் மூதாதையர்களான, வெலடாபியன்ஸ் அல்லது வில்ட்சியன்ஸ்கள் 10 ஆம் நூற்றாண்டு வரை தங்களின் பெற்றோர்களை சாப்பிட்டு வந்தனர்) தற்போது அதனால் எந்த பிரச்சனையும் இல்லை. நெருப்பை பயன்படுத்துதல், விலங்குகளை பழக்குதல் ஆகிய முக்கியத்துவம் வாய்ந்த இரண்டு முன்னேற்றத்தை இறைச்சி உணவு  ஏற்படுத்தியது. உணவை, உண்பதற்கு முன்னரே பாதி ஜீரணமான நிலைக்கு நெருப்பு மாற்றியதால், ஜீரணமாவதற்கான நேரம் மேலும் குறைந்தது., வேட்டையை தாண்டி, இறைச்சி அபரிமிதாகவும், தொடர்ச்சியாகவும் கிடைக்கும் மற்றொரு வழியை, விலங்குகளை பழக்கப்படுத்தியது உறுதி செய்தது. அத்துடன், இறைச்சிக்கு சமமான சத்துக்களை கொண்ட பால் மற்றும் பால் பொருட்கள் புதிய உணவுப் பொருட்களாக உருவாகின. இவ்வாறாக, நெருப்பும், விலங்குகளை பழக்கியதும், மனிதனுடைய விடுதலைக்கு புதிய காரணங்களாக அமைந்தன. இவற்றின் மறைமுக விளைவுகளை பற்றி நாம் விவரித்துக் கூறினால் அது நம்மை வேறு ஒரு பாதைக்கு இட்டுச்சென்று விடும். இருந்தபோதிலும், இவை இரண்டும், மனிதனுடைய மற்றும் சமூகத்தினுடைய வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமாக அமைந்தவை.
உண்ணத்தகுந்த அனைத்தையும் மனிதன் உண்பதற்கு கற்றுக்கொண்டதை போலவே, எத்தகைய காலநிலையிலும் வாழ்வதற்கு கற்றுக்கொண்டான். உலகத்தில் வாழத்தகுந்த இடம் முழுவதும் மனிதன் பரவினான். தனது சொந்த உணர்வில் அதை முழுமையாக செய்த ஒரே விலங்கு மனிதன் மட்டுமே. மனிதனைப்போல் அனைத்து காலநிலைகளிலும் வாழக்கற்றுக் கொண்ட வீட்டு விலங்குகளும், பூச்சியினங்களும் சுயேச்சையாக அதை செய்து விடவில்லை. மனிதனை பின்பற்றியே அவை அவ்வாறு மாறின. ஒரே மாதிரியான வெப்பநிலை நிலவிய தன்னுடைய சொந்த இடத்திலிருந்து ஆண்டின் முதல் பாகம் கோடைகாலமும் இரண்டாவது பாகம் குளிர்காலமுமாக உள்ள இடங்களுக்கு மனிதன் இடம்பெயர்ந்தபோது, குளிரிலிருந்தும், ஈரத்திலிருந்தும் தன்னை பாதுகாத்துக்கொள்வதற்கு இருப்பிடமும், உடைகளும் மனிதனுக்கு தேவைப்பட்டது. இதன்காரணமாக உழைப்புக்கான புதிய துறைகளும், புதிய செயல் வடிவங்களும் தோன்றின. இவை மேலும், மேலும் மனிதனை விலங்குகளிடமிருந்து வேறுபடுத்தியது.
கைகள், பேச்சு உறுப்புகள் மற்றும் மூளை இணைந்து செயல்பட்டது. தனி மனிதனிடத்தில் மட்டுமல்லாமல் சமூகத்தில், மனிதர்கள் மேலும், மேலும் சிக்கலான செயல்பாடுகளை செய்யும் திறனை பெற்றனர். மேலும், மேலும் உயர்ந்த குறிக்கோள்களை நிர்ணயித்துக்கொள்வதும் அவற்றை அடைவதும் அவர்களுக்கு சாத்தியமாயிற்று. ஒவ்வொரு தலைமுறையின் வேலைகளும் வித்யாசப்பட்டது. அது நேர்த்தியாகவும், பலவகைப்பட்டதாகவும் மாறியது. வேட்டையாடுதல், கால்நடை வளர்ப்புடன், விவசாயமும் சேர்ந்துகொண்டது. அடுத்ததாக, நூற்பு, நெசவு, உலோக வேலைகள், மண்பாண்டங்கள் செய்தல் மற்றும் கடற்பயணம் மேற்கொள்ளுதலும் சேர்ந்துகொண்டன. தொழில் மற்றும் வர்த்தகத்துடன் இறுதியாக கலை மற்றும் அறிவியலும் தோன்றின. குலங்கள் (இனக் குழுக்கள்) தேசங்களாகவும், அரசுகளாகவும் வளர்ச்சி பெற்றன. சட்டமும், அரசியலும் உருவாகின. அத்துடன், மனித உள்ளத்தின், மனித விஷயங்களின் வினோத பிரதிபலிப்பான மதம் தோன்றியது. இவை அனைத்தையும் வைத்து பார்க்கும்போது, முதலில், மனித மனதின் விளைபொருட்களாகவும், மனித சமூகத்தை ஆதிக்கம் செலுத்துவதாகவும் தோன்றிய உழைக்கும் கையின் எளிமையான தயாரிப்புகள் பின்வாங்கின. சமுதாய வளர்ச்சியின் மிகவும் ஆரம்ப கட்டத்தில், உழைப்பை திட்டமிட்ட மனித உள்ளம், அதை இழந்து, வேறோரு கைகளினால் உழைப்பு திட்டமிட்டு எடுத்துச் செல்வது நிகழ்ந்தது. நாகரீகத்தின் விரைவான முன்னேற்றத்தின் அனைத்து நன்மைகளும் உள்ளத்திற்கும், மூளையின் வளர்ச்சி மற்றும் செயல்பாடிற்கும் வழங்கப்பட்டது. மனிதன், தன்னுடைய செயல்கள் அனைத்தும், தேவையின் அடிப்படையில் அல்லாமல், எண்ணங்களின் அடிப்படையில் உருவாவதாக கூறுவதற்கு பழகிக்கொண்டான். காலப்போக்கில், பழைய வாழ்க்கை முறை முடிவுக்கு வந்த பிறகு, கருத்து முதல்வாத உலக கண்ணோட்டம் தோன்றியது. அது மனிதனின் மனதில் ஆதிக்கம் செலுத்தியது. டார்வினின் கருத்தை ஏற்றுக்கொண்ட, பொருள்முதல் வாத இயற்கை விஞ்ஞானிகள் கூட, மனிதன் உருவானது குறித்து இதுவரை தெளிவான முடிவை வந்தடைய முடியாத வகையில், கருத்து முதல்வாதம் மனிதனை ஆட்கொண்டுள்ளது. ஏனென்றால், இந்த விஞ்ஞானிகளை ஆட்கொண்டுள்ள கருத்துமுதல்வாத கருத்துகளினால், மனித உருவாக்கத்திற்கு உழைப்பு வகித்த பாத்திரத்தை அவர்கள் அங்கீகரிக்க மறுக்கின்றனர்.
ஏற்கனவே சுட்டிக்காட்டியதுபோல, மனிதன் அளவுக்கு இல்லையென்றாலும், விலங்குகள் தங்களின் நடவடிக்கையினால் அவைகளின் சுற்றுச்சூழலை மாற்றுகின்றன. இந்த மாற்றங்கள், இந்த மாற்றத்தை உருவாக்கிய விலங்குகள் மீது எதிர்செயல் புரிந்து அவற்றில் மாற்றத்தை ஏற்படுத்துகின்றன என்பதையும் பார்த்தோம். இயற்கையில் எதுவுமே தனிப்பட்டமுறையில் நடப்பதில்லை. ஒவ்வொன்றும் மற்றொன்றை பாதிக்கின்றது, அதேபோல் பாதிக்கப்படவும் செய்கின்றது. பெரும்பாலான நேரங்களில், இந்த ஒன்றுக்கொன்று தொடர்புடைய பலதரப்பட்ட இயக்கத்தை பார்க்க தவறுவதால், நம்முடைய இயற்கை விஞ்ஞானிகள் சிறிய விஷயங்களில் கூட தெளிவான முடிவை பெறுவதில்லை. கிரீஸ் நாட்டில், காடுகளின் மறுவருவாக்கத்தை, ஆடுகள் எவ்வாறு தடுத்தன என்பதை பார்த்தோம். இதேபோல், செயின்ட் ஹேலினா தீவில் முதன் முதலில் குடியேறியவர்களால் கொண்டு செல்லப்பட்ட ஆடுகளும், பன்றிகளும் அங்கிருந்த ஒட்டுமொத்த தாவர இனங்களையும் ஏறக்குறைய அழித்துவிட்டன. இதனால், பிற்காலத்தில் இந்த தீவிற்கு வந்த மாலுமிகளால் கொண்டு வரப்பட்ட தாவர இனங்கள், அந்த தீவு முழுவதும் பரவுவதற்கு அது அடித்தளமாக அமைந்தது. விலங்குகள் அவற்றை அறியாமலேயே, எதேச்சையாக அவற்றின் சூற்றுச்சூழலில் நீடித்த ஒரு மாற்றத்தை ஏற்படுத்துகின்றன. ஆனால், முன்கூட்டியே திட்டமிட்ட, ஒரு குறிக்கோளை அடைவதற்காக இயற்கை மீது பாதிப்பை ஏற்படுத்தும் மனிதனின் இயல்பு அவனை விலங்குகளிடமிருந்து மேலும் பிரிக்கின்றது. தான் செய்வது என்ன என்பதை அறியாமலேயே விலங்குகள் செடி கொடிகளை அழிக்கின்றன. ஆனால், மனிதன், தான் விதைப்பதைப்போல பன்மடங்கு விளைச்சளை தரும் என்பதை அறிந்து, மரங்களை அல்லது திராட்சை கொடிகளை நடுவதற்காக நிலத்தில் உள்ள செடி கொடிகளை அழிக்கின்றான். மனிதன், ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டிற்கு பயனுள்ள விலங்குகளையும், தாவரங்களையும் எடுத்துச் செல்கிறான். இதனால், கண்டங்கள் அனைத்திலும் தாவர மற்றும் விலங்கினங்கள் மாற்றமடைகின்றன. இவற்றிற்கும் மேலாக, தாவர மற்றும் விலங்கினங்கள், செயற்கை இனப்பெருக்கத்தின் மூலம், மனிதனால் அடையாளம் தெரியாத வகையில் மாற்றப்படுகின்றன. இதனால், நம்முடைய தானியவகைகளின் மூலமான காட்டுச்செடிகளை கண்டுபிடிப்பது இயலாத காரியமாகியுள்ளது. மிகவும் வித்தியாசமான நாய் இனங்களும், அதேஅளவு வித்தியாசமான குதிரை இனங்களும், எந்த காட்டு விலங்கின் வழித்தோன்றல்கள் என்பதில் தற்போது வரை குழப்பம் நீடிக்கிறது.
விலங்குகளால் முன்கூட்டியே சிந்தித்து, திட்டமிட்டு செயல்பட முடியாது என்பதில் நமக்கு எந்த குழப்பம் இல்லை என்பது சொல்லாமல் விளங்கக்கூடியது. இதற்கு மாறாக, விலங்குகளின் உட்கருவில் திட்டமிட்ட செயல்பாடு நிகழ்கிறது. அதாவது, எங்கெல்லாம் புரோட்டோபிளாசமும், உயிருள்ள அல்புமீன்களும் இருப்பதும், வினைபுரிவதும் நடக்கிறதோ அங்கு, குறிப்பிட்ட புறநிலை தூண்டலின் காரணமாக, அது மிகச்சிறியதாயினும், திட்டவட்டமான இயக்கத்தை மேற்கொள்கிறது. இன்னும் ஒரு செல் கூட இல்லாத நிலையிலும் இந்த எதிர்வினை நிகழ்கிறது. பூச்சிகள் தாவரங்களை உண்ணுவதிலும், அவற்றின் இரையை பிடிப்பதிலும், அவற்றிக்கே அறியாமல் ஒரு திட்டமிட்ட செயல் உள்ளது. விலங்குகளில், திட்டமிட்ட செயல்களில் ஈடுபடும் திறன், அதன் நரம்பு மண்டலத்தின் வளர்ச்சியை பொறுத்தே அமைகிறது. பாலூட்டிகளில் இந்த வளர்ச்சி அதிகமாக உள்ளது. இங்கிலாந்தில் நரி வேட்டையின்போது, துரத்துவபரிடமிருந்து தப்பிச்செல்ல ஒரு நரி எவ்வளவு துல்லியமாக அந்த பிரதேசம் குறித்த அறிவை பயன்படுத்துகிறது என்பதையும், தன்னை மோப்பம் பிடிக்காமல் இருப்பதற்கு அந்த பிரதேசத்தின் தன்மையை எவ்வாறு தனக்கு சாதகமாக மாற்றிக்கொள்கிறது என்பதையும் காணமுடியும். மனிதனோடு பழகியதன் காரணமாக, வளர்ச்சியடைந்த வீட்டு விலங்குகளில், ஒரு குழந்தைக்கு இணையான அனைத்து சாதூர்யங்களும் இருப்பதை நாம் காணமுடியும். நம்முடைய மூதாதையர்களான விலங்குகள் எவ்வாறு ஒரு புழுவிலிருந்து பல லட்சம் ஆண்டுகளாக பரிணாம வளர்ச்சியடைந்தார்களோ, அந்த ஒட்டு மொத்த நிகழ்வின் சுருங்கிய வடிவத்தை, தாயின் கருப்பையில் உருவான மனித கருவின் வளர்ச்சியில் பார்க்கலாம். அதபோல், மனித குழந்தையின் மன வளர்ச்சி, நம்முடைய கடைசி விலங்கு மூதாதையரின் (மனிதக்குரங்குகளின் (மொ.பெ)) அறிவு வளர்ச்சியின் சுருங்கிய வடிவமேயாகும். ஆனால், அனைத்து விலங்குகளின் ஒட்டுமொத்த, திட்ட மிட்ட செயல்களும், அவைகளின் விருப்பத்தை இந்த உலகத்தில் முத்திரையாக பதிப்பதில் வெற்றிபெற முடியவில்லை. அது மனிதனுக்கு மட்டுமே உரித்தாக்கப்பட்டது.
சுருங்கச் சொன்னால், விலங்குகள் அதன் சுற்றுச்சூழலை வெறுமனே பயன்படுத்த மட்டுமே செய்கின்றன. அந்த சூழலில் அவைகள் இருப்பதனால் ஏற்படும் விளைவாக மட்டுமே அதில் மாற்றத்தை ஏற்படுத்துகின்றன. ஆனால், மனிதன் சுற்றுச்சூழலில் மாற்றத்தை ஏற்படுத்துவதன் மூலம் அதை தனக்கு சேவை செய்ய வைக்கிறான். அதற்கு எஜமானனாகிறான். இதுவே மனிதனுக்கும் மற்ற விலங்குகளுக்கும் இடையிலான, இறுதியான மற்றும் முக்கியமான வேறுபாடாகும். இந்த வேறுபாட்டையும் "உழைப்பே" ஏற்படுத்துகின்றது.
இயற்கையின் மீதான மனிதனின் வெற்றியை குறித்து நாம் பெரிய அளவில் தற்புகழ்ச்சி அடையத்தேவையில்லை. ஏனென்றால், இந்த வெற்றி ஒவ்வொன்றிற்கும் இயற்கை நம்மை பழிவாங்குகிறது. ஒவ்வொரு வெற்றியும், முதல் நிலையில் நாம் எதிர்பார்த்த பலனை கொடுக்கிறது என்பது உண்மையே. ஆனால் இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலைகளில், நாம் எதிர்பார்க்காத முற்றிலும் வேறுபட்ட விளைவுகளை ஏற்படுத்துகிறது. பல நேரங்களில் இந்த விளைவுகள் முதல் நிலையில் கிடைத்த பலனை இல்லாமல் போகச் செய்கிறது. மெசபடோமியா, கிரீஸ், ஏசியா மைனர் மற்றும் பல பகுதிகளில் உள்ள மக்கள், விவசாய நிலங்களை உருவாக்குவதற்காக, காடுகளை அழித்தனர். இதனால், நீர்த்தேக்கங்களும், அவை ஒன்று கூடும் இடங்களும் அழிக்கப்பட்டு, அந்த நாடுகள் படுமோசமான நிலைக்கு தள்ளப்பட்டன. இதற்கு அவர்களே காரணமாக அமைந்தனர் என்பதை அவர்கள் கனவிலும் நினைக்கவில்லை. ஆல்ப்ஸ் மலையில் உள்ள இத்தாலியர்கள், அதன் வடக்கு சரிவில் உள்ள பைன் மரக்காடுகளை பரிவுடன் பேணிக்காத்தனர். ஆனால், அதன் தெற்கு சரிவில் உள்ள பைன் மரக்காடுகளை அழித்தனர். இது, அந்த பகுதியில் பால் பண்ணைத்தொழில் முற்றிலும் அழிவதற்கு காரணமாக அமைந்தது என்பதை அவர்கள் அறியவில்லை. பைன் மரங்கள் அழிக்கப்பட்டதால், ஆண்டின் பெரும்பகுதி மலையில் உருவாகும் நீர்சுனைகளுக்கு தண்ணீர் இல்லாமல் செய்துவிட்டதையும், மழைக்காலங்களில் அவை சீற்றம் மிகுந்த வெள்ளப்பெருக்குடன் சமவெளியில் பாய்வதற்கு வழிசெய்துவிட்டதையும் அவர்கள் கொஞ்சமும் அறியவில்லை. ஐரோப்பாவில் உருளைக் கிழங்குகளை பரப்பியவர்கள், அந்த மாவுசத்து மிகுந்த கிழங்குடன் சேர்த்து, கண்டமாலை என்ற நோயை பரப்புகின்றனர் என்பதை அவர்கள் அறியவில்லை. ஆகவே, வெளிநாட்டு மக்களை வெற்றிகொள்வது போல, இயற்கைக்கு வெளியே நின்று கொண்டு, நாம் இயற்கையை அடக்கி ஆளவில்லை. நாம் ரத்தமும், சதையும், மூளையுமாய் இயற்கையுடன் சேர்ந்தவர்கள். இயற்கையின் மத்தியில் வாழ்கின்றோம். இயற்கையின் விதிகளை கற்றுக்கொண்டு, அவற்றை சரியாக பயன்படுத்துவதில் மற்ற விலங்குகளை விட நமக்கு வாய்ப்பு அதிகம். இந்த உண்மையின் அடிப்படையிலேயே அதன் மீதான நமது ஒட்டுமொத்த ஆளுகையும் அடங்கியுள்ளது. இவை அனைத்தும் ஒவ்வொரு படிநிலையிலும் நமக்கு உணர்த்தப்படுகிறது.
உண்மையில், கடந்துபோகும் ஒவ்வொரு நாளும், இயற்கையின் விதிகள் குறித்து நாம் மேலும் பல புரிதலை பெறுகின்றோம். இயற்கையின் பாராம்பரிய வழியில் நாம் குறுக்கிடுவதால் ஏற்படும் உடனடி விளைவுகளையும், எதிர்காலத்தில் ஏற்படும் விளைவுகளையும் புரிந்துகொள்கிறோம். குறிப்பாக, இந்த நூற்றாண்டில் இயற்கை விஞ்ஞானத்தில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய முன்னேற்றங்களுக்குப் பிறகு, குறைந்த பட்சம் நம்முடைய அன்றாட உற்பத்தி நிகழ்வுகளினால், எதிர்காலத்தில் ஏற்படும் விளைவுகளை புரிந்துகொள்வதிலும் மற்றும் அதை கட்டுப்பத்தும் அறிவிலும் முன் எப்போதையும் விட முன்னேறியுள்ளோம். இது மேலும் முன்னேற்றமடையும்போது, மனிதர்கள் இயற்கையுடன் தங்களுக்குள்ள ஒருமைப்பாட்டை மேலும் மேலும் உர்ணந்துகொள்வார்கள். ஐரோப்பாவில், பண்டைய கிரேக்க, லத்தீன் நாகரிகத்தின் வீழ்ச்சிக்குப் பிறகு தோன்றிய கிறிஸ்துவ மதத்தின்போது மேலெழுந்த, மனதுக்கும் பொருளுக்கும், மனிதனுக்கும் இயற்கைக்கும், ஆத்மாவுக்கும் உடலுக்கும் இடையிலான முரண்பாடுகள் என்ற அர்த்தமற்ற, இயற்கைக்கு மாறான கருத்துகளும் இயற்கை விஞ்ஞானம் மேலும் முன்னேற்றடையும்போது சாத்தியமற்றுப்போகும். 
உற்பத்திதுறையில் நமது செயல்பாடுகளினால் நீண்ட நாட்களுக்கு பிறகு ஏற்பட்ட இயற்கையான விளைவுகளை எவ்வாறு கணக்கிடுவது என்பதை சிறிதளவு கற்றுக்கொள்வதற்கு ஆயிரக்கணக்கான ஆண்டு உழைப்பு தேவைப்பட்டது. ஆனால், இந்த செயல்களினால், நீண்ட நாட்களுக்குப் பிறகு சமூகத்தில் ஏற்பட்ட விளைவுகளை கணக்கிடுவது இன்னும் கடினமானதாக இருந்தது. உருளைக் கிழங்கின் பரவலால் எவ்வாறு கண்டமாலை நோய் பரவியது என்பதை ஏற்கனவே பார்த்தோம். ஆனால், உருளைக் கிழங்கு உணவை மட்டுமே உண்ணக் கூடிய நிலைக்கு தொழிலாளர்கள் மாறிய சூழ்நிலையில், பல உலக நாடுகளில், பாமர மக்களின் வாழ்நிலையில் ஏற்பட்ட விளைவுகளை ஒப்பிடும்போது கண்டமாலை நோய் பெரியதாக தோன்றுவதில்லை. உதாரணத்திற்கு, கிட்டத்தட்ட உருளைக்கிழங்கை மட்டுமே உணவாக உட்கொண்ட அயர்லாந்தில், 1847ஆம் ஆண்டு, உருளைக்கிழங்கு செடிகளில் ஏற்பட்ட நோயின் காரணமாக உருவான பஞ்சத்தினால், 10 லட்சம் மக்கள் உயிரிழந்ததையும், 20 லட்சம் மக்கள் இடம்பெயர்ந்ததையும் ஒப்பிடும்போது, கண்டமாலை நோய் என்பது ஒன்றுமில்லை என்றே கூறலாம். காய்ச்சி வடிப்பதன் மூலம் சாராயத்தை தயாரிப்பதற்கு அரேபியர்கள் கற்றுக்கொண்டபோது, அந்த சமயத்தில் அதுவரை கண்டுபிடிக்கப்படாத அமெரிக்க கண்டத்தில் வாழ்ந்த பழங்குடியினரை அழிப்பதற்கான ஒரு ஆயுதத்தை செய்கிறார்கள் என்பதை அவர்கள் அறிந்திருக்கவில்லை. அதன் பின்னர், அமெரிக்காவை கொலம்பஸ் கண்டுபிடித்தபோது, அங்கு, காய்ச்சி வடிப்பதன் மூலம் சாராயத்தை அவர் உருவாக்கியபோது, ஐரோப்பாவில் என்றோ ஒழிக்கப்பட்ட அடிமைதனத்திற்கு புத்துயிர் அளித்ததையும், கருப்பின மக்களை அடிமைகளாக விற்கும் வியாபாரத்திற்கு அடித்தளம் அமைத்ததையும் அவர் அறியவில்லை. (Write in detail on how distiling spirit was created slavery trade in America ) பதினேழாவது, பதினெட்டாவது நூற்றாண்டில், நீராவி எஞ்சினை கண்டுபிடிப்பதற்காக உழைத்தவர்கள், உலகம் முழுவதிலும் சமூக உறவுகளில், புரட்சிகர மாற்றத்தை ஏற்படுத்தும் ஒரு கருவியை தயாரிக்கிறோம் என்பதை அறியவில்லை. இந்த நீராவி எஞ்சின், குறிப்பாக ஐரோப்பாவில், சிறுபான்மை மக்களிடம் செல்வங்களை குவியச்செய்து, பெரும்பான்மை மக்களின் உடைமைகளை பறித்தது.  தொடக்கத்தில் முதலாளி வர்க்கத்திற்கு சமூக, அரசியல், பொருளாதார மேலாதிக்கத்தை அளித்தது. பிறகு, முதலாளி வர்க்கம் தூக்கியெறியப்பட்டு, அனைத்து வகையான வர்க்க வேறுபாடுகளும் ஒழிக்கப்படக்கூடிய, முதலாளிகளுக்கும், தொழிலாளர்களுக்கும் இடையிலான வர்க்க போராட்டம் உருவாதற்கு காரணமாக அமைந்தது. ஆனால் இந்த வகையிலும் கூட, நீண்ட, கடுமையான அனுபவங்களின் மூலமும், வரலாற்று தரவுகளை சேகரித்து அவற்றை பகுப்பாய்வு செய்வதன் மூலமும், உற்பத்தி செயல்பாடுகளின் மூலம் ஏற்படும் மறைமுகமான நீண்ட கால சமூக விளைவுகள் குறித்து தெளிவான பார்வை பெறுவதற்கு படிப்படியாக கற்றுக்கொள்கிறோம். எனவே, இந்த விளைவுகளை கட்டுப்படுத்தி, முறைப்படுத்தவும் நமக்கு வாய்ப்பு கிடைத்தது.
இருந்தபோதும், இவ்வாறு முறைப்படுத்துவதற்கு வெறும் அறிவு மட்டும் போதாது. இதுவரை நிலவி வரும் உற்பத்தி முறையில் ஒரு முழு புரட்சியும், அதனுடன் சேர்ந்து, தற்போதைய சமூக கட்டமைப்பு முழுவதிலும் ஒரு புரட்சியும் தேவைப்படுகிறது.
இதுவரை நடைமுறையில் இருக்கும் உற்பத்தி முறைகள் அனைத்தும், உழைப்பின் உடனடியான மற்றும் நேரடியான விளைபயனை அடைவதையே குறிக்கோளாக கொண்டிருந்தன. நீண்டகாலதிற்கு பின்பே வெளிப்படுகிற மற்றும் படிப்படியாக திரும்பச் செய்வதாலும், குவிக்கப்படுவதாலும் பயனடைகிற மேலும் பல விளைவுகள் முற்றிலுமாக புறக்கணிக்கப்பட்டன. ஒருபுறம், உண்மையான நில பொதுவுடமை என்பது, மனித இனத்தின் வளர்ச்சி நிலையுடன் சார்ந்திருந்தது. அதில், பொதுவாக உடனடியாக கிடைக்கக்கூடிய மற்றும் முன் கூட்டியே எதிர்பார்க்கப்பட்ட வகையில் அவர்களின் அறிவு குறுக்கப்பட்டிருந்தது. மற்றொரு புறம், குறிப்பிட்ட அளவிலான பயன்படுத்ததக்க உபரி நிலங்கள், இந்த புராதன பொருளாதாரத்தின் தவறான விளைவுகளை திருத்துகின்றது. இந்த உபரி நிலங்கள் தீர்ந்துபோன பிறகு பொதுவான உடைமை என்பது வீழ்ச்சியடைந்தது. உற்பத்தியின் உயர்வடிவங்கள் அனைத்தும் மக்களை வர்க்கங்களாக பிரித்ததுடன், ஆளும் வர்க்கம் மற்றும் ஒடுக்கப்படும் வர்க்கங்களுக்கு இடையிலான முரண்பாட்டை தோற்றுவித்தன. இவ்வாறாக ஆளும் வர்க்கத்தின் நலன்களே உற்பத்தியை முன்னோக்கி எடுத்துச் செல்லும் காரணிகளாக மாறின. ஏனெனில், ஒடுக்கப்பட்ட மக்கள் உயிர்வாழ்தற்கு அத்தியாவசியமான தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் உற்பத்தி அமையவில்லை. மேற்கு ஐரோப்பாவில் தற்போது நிலவி வரும் முதலாளித்துவ உற்பத்தி முறையில் இவ்வாறே நிகழ்ந்து வருகின்றது. உற்பத்தியிலும், வினியோகத்திலும் ஆதிக்கம் செலுத்தும் முதலாளிகள், தங்களுக்கு கிடைக்கும் உடனடி பலனை பற்றி மட்டுமே கவலைபடுபவர்களாக உள்ளனர். உண்மையில், இந்த பலன் என்பதும், உற்பத்தி செய்யப்படும் அல்லது வினியோகிக்கப்படும் பொருட்களின் உபயோகத்தை பற்றியதல்ல. உற்றுநோக்கி பார்த்தால், விற்பனையால் கிடைக்கும் லாபமே அந்த பலனுக்கான ஒரே உந்து சக்தியாக உள்ளது.
உற்பத்தி மற்றும் பறிமாற்ற தளத்தில், மனிதர்களின் செயல்பாட்டினால் ஏற்படும் சமூக விளைவுகளை மட்டுமே, முதலாளித்துவ சமூக அறிவியலான பழைய வகை பொருளாதாரம் முக்கியமாக ஆராய்கிறது. சமூக அமைப்பின் தத்துவார்த்த வெளியீட்டாக உள்ளதுடன் இது ஒத்துபோவதாக உள்ளது. முதலாளிகள், உடனடியான லாபத்திற்காகவே உற்பத்தியிலும், பரிமாற்றத்திலும் ஈடுபட்டிருப்பதால், அடுத்ததாக உள்ள, உடனடி விளைவுகள் மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட வேண்டும். ஒரு உற்பத்தியாளன் அல்லது வியாபாரி, உற்பத்திய செய்யப்பட்ட அல்லது விலைக்கு வாங்கப்பட்ட பொருளை, வழக்கமான கொள்ளை லாபத்திற்கு விற்பதுடன் அவன் திருப்தியடைகிறான். அடுத்ததாக, அந்த பொருளுக்கும் அதை வாங்கியவர்களுக்கும் என்ன நடக்கிறது என்பதுபற்றி அவன் கவலைப் படுவதில்லை. இயற்கையான விளைவுகள் குறித்தும் அவன் கவலைப்படுவதில்லை. கியூபா நாட்டின் மலைப்பகுதியில், மிக லாபகரமான காப்பி செடிகளை வளர்ப்பதற்கு, அவற்றின் ஒரு தலைமுறைக்கு மட்டுமே உரமாக அமையும் சாம்பலை பெறுவதற்கு, மலையில் வளர்ந்திருந்த காடுகளை முதலாளிகள் தீயிட்டு கொளுத்தினர். இதனால், பின்னாளில் பெய்த, வெப்பமண்டலத்திற்கே உரித்தான கனமழை, மலையில் மேல் பரப்பில் இருந்த மண் முழுவதையும் அடித்துச் சென்றதால் மலையில் வெறுமனே பாறைகள் மட்டும் மிஞ்சின. காடுகளை கொளுத்தியது குறித்தோ, அதனால் பின்னாளில் ஏற்பட்ட பாதிப்பு குறித்து முதலாளிகள் கவலைப்படவில்லை. தற்போது நிலவும் உற்பத்திமுறை, இயற்கையை போலவே, சமூகத்திலும் உடனடியாக மற்றும் உறுதியாக கிடைக்கும் லாபத்தை மட்டுமே நோக்கமாக கொண்டுள்ளது. இதனால் நீண்ட காலத்திற்குப் பிறகு ஏற்படும் விளைவு, முற்றிலும் வித்தியாசமாக, இதன் இயல்பு பெரும்பாலும் நேர்எதிராக மாறிவிடுவது ஆச்சர்யத்தை ஏற்படுத்துகிறது. தொழில்துறை சுழற்சியின் ஒவ்வொரு 10 ஆண்டிலும்,  உற்பத்திக்கும், தேவைக்கும் இடையிலான சுமூகமான நிலை மிகவும் நேர் எதிரானதாக மாறிவிடுகிறது. 1873 ஆம் ஆண்டு ஜெர்மனியும் கூட இந்த நெருக்கடியின் தொடக்கநிலை அனுபவத்தை பெற்றுள்ளது. ஒருவரின் சொந்த உழைப்பை அடிப்படையாக கொண்ட தனியுடமை, தொழிலாளர்களின் உடைமைகளை பறிக்கும் வகையில் வளர்ந்து, அனைத்து செல்வங்களும் உழைப்பாளி அல்லாதவர்களின் கைகளில் மேலும், மேலும் குவியத் தொடங்குகிறது. (இத்துடன் கையெழுத்து பிரதி நின்று விடுகிறது.)